முதலில் இதை வாசித்துவிட்டுத் தொடரவும்.
அன்பின்
பிச்சை,
உமது
தளத்தில் வெண்முரசின் ஒரு பகுதியாம் 'நீலம்' பற்றிய
உமது கேள்விகளையும் ஜெயனின் பதில்களையும் பார்த்தேன்.
'எல்லாபடைப்புகளும்
எல்லாருக்குமானவை அல்ல' என்ற அ.மி.யின் கருத்தை ஜெயன் எடுத்தாண்டது
சரியெனவேபடுகிறது. நமது உரையாடல்களின் முனைகள் இந்தப் புள்ளியில்தான்
சந்திக்கின்றன என நினைக்கிறேன். ஆனால், ஜெயனின் 'நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே
அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும்
மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான ஒரு பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன்' என்பதிலுள்ள ‘பொதுவான ஒரு
பிரிவினை’ பற்றிக் கடித உரையாடலாகத் தொடரலாமென்றிருக்கிறேன்.
பொதுவாகவே, அனைத்து இலக்கியங்களும் இலக்கைச் சுவைபட
இயம்புவதைப்போலவே, ‘அறம்’ எனும்
மையக்கூறினைச் சுற்றியே நகர்வதை உணர்ந்திருக்கலாம். எவ்வாறெனில், கள்வனெனில் ஒழுக்கம் எனும் அறத்திலிருந்து பிறழ்ந்தவன்; காவலனெனில் தனதொழுக்கத்தால் அமைதியெனும் அறத்தைக் காப்பவன். மட்டுமல்ல,
கற்பு, நெறி, சீர்(ஒழுங்கு),
ஏர், போர் இவையெல்லாமே அறத்தைப் பற்றியவையாகவே
இருக்கின்றன, அவை அறத்திலிருந்து பிறழ்ந்திருந்தாலும்!
அறமென்பது மீபெரும் உருவாக்கம்.
அன்பு, பாசம், பந்தம், சமூகம்,
கலாச்சாரம், பண்பாடு, உவகை, காதல், காமம், அமைதி இன்னும்
இன்னும் பலவற்றால் பின்னப்பட்ட மூங்கில் பந்து. ஒவ்வொரு நேர்கோட்டு இணுங்கியாலும்
கட்டப்பட்ட கோளப்பந்து. எந்தப்படைப்பிலும், எழுத்தாளனானவன்
அக்கோளப்பந்தின் ஏதுமொரு இணுங்கியைக் கிள்ளி, அவனது
பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையின்றியோ அதனை மையப்படுத்தியோ, விலகியோ
இயங்கி வாசகனின் அகவுணர்வைத் தூண்டி தனது படைப்பை நிலைநிறுத்துகிறான்.
இந்த இணுங்கியைப் பற்றிய
சுயநிலைப்பாடுதான் ஜெயன் சொன்ன அந்தப் பிரிவினை என்று நினைக்கிறேன். இன்னும்
கூர்தீட்டிச் சொல்லவேண்டுமெனில், அன்பெனும் அறத்தில் பிச்சையாகிய உமக்கு ‘உயிர்க்கொலை பாவம்’ என்ற நிலைப்பாடு; எனக்கோ ‘மீன், கோழி மற்றும்
ஆடுகள்வரை கொள்ளலாம். தவறொன்றுமில்லை’ எனும் நிலைப்பாடு.
இதுமாதிரியான நுண் உணர்வுகளின்
நிலைப்பாட்டு வேற்றுமைகள்தான் ஜெயன் சொல்லும் பிரிவினை(களு)க்குக் காரணமென்றும்
எண்ணுகிறேன். இந்தமாட்டில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு படைப்பு, பல்வேறு
நிலைப்பாட்டை இயம்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் பரிதாபம் என்னவெனில்
இந்தப் பிரிவினைகளை எற்றுக்கொண்டவாறே ஒரு படைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டால்
போதும். அதுவே இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; இதில் ஃபேக்,
ஒரிஜினல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
‘அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த
புகழும் இல.”
மேலும்
எழுதுவோம்.