இணைப்பில்

Friday, January 17, 2014

கொசு பிடிப்பவன்

கொசு பிடிப்பதில் நான் வல்லவனாகிவிட்டேன். ஆம், நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். அடிப்பதிலள்ள, பிடிப்பதில்தான். ஆல்கஹாலேரிய என் ரத்தத்தைக் குடித்த கொசுக்கள், காற்றில் மிதந்துவரும் அழகே அழகு. என் பிரியக் கொசுக்கள் வலிக்காமல் ரத்தம் உறிஞ்சுவதில் வல்லவை. என் அறையின் சிலந்தி வலைகளினூடே ஒரு தேர்ந்த விமானியைப் போல, தன் உடலைச் சுமந்து பறந்து செல்ல என் பிரியக் கொசுக்களால் மட்டுமே முடியும்.

கதவுச் சந்து, சன்னல் என்றெல்லாம் இல்லை. என் அறை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என் பிரியக் கொசுக்கள். என் அலமாரியின் ஒரு பகுதியை அவற்றிற்காகவே ஒதுக்கிவைத்திருக்கிறேன்.

அவை என்னுடன் பேசும் மொழியில், அந்தக் குழந்தைத்தனத்தில், அந்த வருடலில், அட அட அட... என்னே சுகம்.

ஏழு ஸ்வரங்களில், ரீங்காரம் என் பிரியக் கொசுக்களிடமிருந்தே பிறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இரவு நேரங்களில் அவை என்னுடன் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. நேரே வந்து என்னில் அமர்ந்து, வலிக்காமல் ரத்தமெடுத்துச் செல்லும். ரத்தம் குடித்த போதையுடன், அவை நன்றாக ஆடும். அதுவும் அந்த "அப்படிப்போடு.. போடு.." பாடலுக்கு அவை ஆடிய ஆட்டமிருக்கிறதே! கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்.

காலை நேரங்களில் என் பிரியக் கொசுக்களின் சங்கீதம் ஆரம்பமாகிவிடும். பாடுவதற்கு முன்பு சுதி சேர்ப்பதுபோல், தொண்டையைக் கனைப்பதுபோல் பற்பல முஷ்தீபுகளைப் பண்ணும். பின் "மானச சஞ்சரரே" என்று ஆரோகணிக்க ஆரம்பிக்கும். கண்களைக் கூர் கொண்டு பார்த்தால், அவற்றில் ஒரு கொசு 'கொன்னக்கோல்' பிடித்து ஜதி சொல்லிக்கொண்டிருக்கும்.

அட..அட...அட....

அந்தக் காட்சியை சொல்லால் விவரிக்க முடியாது.

"பரிபுரிதா முரளி" என்னும்போது அவற்றின் சாரீரம் உச்ச ஸ்தாயில் போகும். என்னே ஆலாபனை, என்னே விஸ்தரிப்பு!

என் பிரியக் கொசுக்களிடம், பிரியம் என்றுமே குறைந்ததில்லை; அவை முதலில் வலிப்பதுபோல் கடித்தபோதும்கூட.

 இப்பொழுதெல்லாம் என் கொசுக்களின் போதையாட்டம் வெறியாக மாறிவிட்டது போலும். திடீர் திடீரென அடித்துக்கொள்கின்றன. பாடலுக்கேற்ற லயம் தப்புகின்றன. குடிக்கும் ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு மிகுந்திருக்குமென்று எண்ணிக்கொண்டேன்.

என் பிரியக் கொசுக்கள் இப்போது துவண்டு துவண்டு விழுகின்றன. அதைப் பிடித்துப் பிடித்து நானும் வல்லவனாகிப்போனேன். என் பிரியக் கொசுக்களைப் பிடிக்க நான் இருக்கிறேன்.

என்னைப் பற்றிப்பிடிக்க எவர் வருகிறீர்?