இணைப்பில்

Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Friday, January 17, 2014

கொசு பிடிப்பவன்

கொசு பிடிப்பதில் நான் வல்லவனாகிவிட்டேன். ஆம், நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். அடிப்பதிலள்ள, பிடிப்பதில்தான். ஆல்கஹாலேரிய என் ரத்தத்தைக் குடித்த கொசுக்கள், காற்றில் மிதந்துவரும் அழகே அழகு. என் பிரியக் கொசுக்கள் வலிக்காமல் ரத்தம் உறிஞ்சுவதில் வல்லவை. என் அறையின் சிலந்தி வலைகளினூடே ஒரு தேர்ந்த விமானியைப் போல, தன் உடலைச் சுமந்து பறந்து செல்ல என் பிரியக் கொசுக்களால் மட்டுமே முடியும்.

கதவுச் சந்து, சன்னல் என்றெல்லாம் இல்லை. என் அறை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என் பிரியக் கொசுக்கள். என் அலமாரியின் ஒரு பகுதியை அவற்றிற்காகவே ஒதுக்கிவைத்திருக்கிறேன்.

அவை என்னுடன் பேசும் மொழியில், அந்தக் குழந்தைத்தனத்தில், அந்த வருடலில், அட அட அட... என்னே சுகம்.

ஏழு ஸ்வரங்களில், ரீங்காரம் என் பிரியக் கொசுக்களிடமிருந்தே பிறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இரவு நேரங்களில் அவை என்னுடன் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. நேரே வந்து என்னில் அமர்ந்து, வலிக்காமல் ரத்தமெடுத்துச் செல்லும். ரத்தம் குடித்த போதையுடன், அவை நன்றாக ஆடும். அதுவும் அந்த "அப்படிப்போடு.. போடு.." பாடலுக்கு அவை ஆடிய ஆட்டமிருக்கிறதே! கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்.

காலை நேரங்களில் என் பிரியக் கொசுக்களின் சங்கீதம் ஆரம்பமாகிவிடும். பாடுவதற்கு முன்பு சுதி சேர்ப்பதுபோல், தொண்டையைக் கனைப்பதுபோல் பற்பல முஷ்தீபுகளைப் பண்ணும். பின் "மானச சஞ்சரரே" என்று ஆரோகணிக்க ஆரம்பிக்கும். கண்களைக் கூர் கொண்டு பார்த்தால், அவற்றில் ஒரு கொசு 'கொன்னக்கோல்' பிடித்து ஜதி சொல்லிக்கொண்டிருக்கும்.

அட..அட...அட....

அந்தக் காட்சியை சொல்லால் விவரிக்க முடியாது.

"பரிபுரிதா முரளி" என்னும்போது அவற்றின் சாரீரம் உச்ச ஸ்தாயில் போகும். என்னே ஆலாபனை, என்னே விஸ்தரிப்பு!

என் பிரியக் கொசுக்களிடம், பிரியம் என்றுமே குறைந்ததில்லை; அவை முதலில் வலிப்பதுபோல் கடித்தபோதும்கூட.

 இப்பொழுதெல்லாம் என் கொசுக்களின் போதையாட்டம் வெறியாக மாறிவிட்டது போலும். திடீர் திடீரென அடித்துக்கொள்கின்றன. பாடலுக்கேற்ற லயம் தப்புகின்றன. குடிக்கும் ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு மிகுந்திருக்குமென்று எண்ணிக்கொண்டேன்.

என் பிரியக் கொசுக்கள் இப்போது துவண்டு துவண்டு விழுகின்றன. அதைப் பிடித்துப் பிடித்து நானும் வல்லவனாகிப்போனேன். என் பிரியக் கொசுக்களைப் பிடிக்க நான் இருக்கிறேன்.

என்னைப் பற்றிப்பிடிக்க எவர் வருகிறீர்?

Thursday, November 7, 2013

Writer அதாவது எழுத்தாளர்



மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.

அவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.

கதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.

அவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா? கொட்டிவிடுங்கள்.

ஐயடா... 

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.

இதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.

ஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா? பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,
”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.” 

அவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....
இப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....
அவரது சகதர்மினியேதான்.

இவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.

அவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......
மக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

என்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.

-வெளங்காதவன்.

Sunday, June 30, 2013

மொட்டக்கடுதாசி



மோகி,
நாந்தேன்! 

நேத்துப் பாத்தேன், நம்ம ஊரு வாயக்காலிலே துணி தொவைக்கும்போது. ஒரு வாரமா மாமன் ஊருக்குப் போயிருந்தியா? கொஞ்சம் எளச்சு வந்திருக்க. ஏன் அங்க சோறுகீறு எதுவும் போடலியா? உன் அப்பத்தா நேத்து உன் மாமனார், அதேன் நம்ம வீட்டுக்கு வந்திருந்துச்சு. உங்க வீட்ல கோழிக் கறியாம். டீக்கடை ராமசாமி வூட்டு நாயி கடிச்சதுல இருந்து, கோழி திங்கிறது இல்லியாம். ஒண்ணா ஒக்காந்து கொழுக்கட்டை சாப்புட்டம்.

நாஞ்சொன்னேன் பாத்தியா? தங்கவேலு அவனோட வீட்ட நமக்கு விக்கமாட்டானாம். என்னமோ போ. இப்போ ஏதோ புதுசா கிரீமு வந்திருக்காம்; இனிமே பேரன் லவ்லி போடாத.ஆவணி மாசம் எல்லாருஞ்சேந்து மாகாளியம்மன் கோயிலு கும்பாவுஷேகம் வச்சிருக்காங்களாம். நேத்து மாரீப்பன் சொன்னான்.

ஊருல இருந்து ஏதாச்சும் வாங்கியாந்தியா? நீ சொன்னமாரியே பீடி குடிக்கறத உட்டுட்டேன். நம்ம செவலை மாட்டுக்கு பால் வத்திப்போயிருச்சு. இனிமே, மொண்டி அப்பிச்சி மாட்டுப்பால் தான் வாங்கோணும். தெண்டபாணி மாமன் சீட்டு ஆரம்பிச்சு இருக்காம். அம்மா சொல்லுச்சு. எங்கபோயி மாசம் ரெண்டாயிரம் குடுக்கறது?

செரி வுடு. எல்லாஞ்சரியாடும். 

உங்க அப்பங்கிட்ட எப்ப வந்து பொண்ணுக் கேக்கட்டும்? பல்லடத்துல இருந்து ஜாதகம் கேட்டு வந்தாங்களாம். மூணு ஏக்கரா காடு வச்சிருக்குற எனக்கு உங்க அப்பன் பொண்ணுக் குடுப்பானான்னு தெரியல. அதுனால, வெகுசீக்கிரமா சொல்லி அனுப்பு.

கலியாணச் செலவுக்கு காளைய விக்கோணும். அக்காளுக்கு சீலை துணிமணி எடுக்கோணும். ஒரு பவுனு இருவதாயிரம். ஆறு பவுனும் எடுக்கோணும். காட்டுப் பத்திரத்த வச்சனாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன்.

உனக்கு எத்தினி சீலை எடுக்குறது? நானு ஒரு சீலை எடுத்தேன். அம்மா அதப் பாத்திடுச்சு. “உனக்குத்தான்மா” ன்னு குடுத்துட்டேன். இதெல்லாம் பத்தாதுன்னு ராமண்ணங்கிட்ட சொல்லி ரெண்டு சீலை எடுத்திருச்சு. வாரம் எறநூறு ரூவா மூணு மாசம் கொடுக்கோணும்.

நாளைக்கு உன்னை மாரியாத்தா கோயில்ல பாக்குறேன்.

இதையப் படிச்சுட்டு, எப்பப் பொண்ணுப்பாக்க வரட்டும்னு பதில் கடுதாசி கொடுக்கவும். நாளைக்கு உங்க அப்பத்தா கூட வந்தாப் பேச முடியாது.

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.

-வெளங்காதவன்

Saturday, June 1, 2013

இலக்கிய மொண்ணைகள்-கடிதங்கள்



திரு. இலக்கியச்செம்மல் வெளங்காதவன் அவர்களுக்கு,



   இலக்கியச் சார்பும், மென்னியல் நுட்பமும், புனைவியல் திறனும் ஒருசேர்ந்த எழுத்தாளர்களுக்கு, (கவனிக்க) தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதை சமகால எழுத்தாளர்கள் குறையியைபுகின்றாரே? இது சமூக வக்கிரத்தின் வெளிப்பாடா? இன்னும் இது தொடருமா?



அன்புடன்,

கெண்டைக்கால் கெணேசன்,

கெணத்துக்கடவு.


அண்ணேன்,
உன்னோட கேள்வியப்பாத்து தெகச்சு நிக்கிறேண்ணேன். கெணத்துக்கடவுலிருந்து இம்மாம் பெரிய சமாச்சாரத்த, மூணே வரில கேட்டிருக்கியே!! இருண்ணேன் சொல்லுறேன்.

அதாகப்பட்டது, கெணேசன்ன்ற உன்னோட பேரைப் பாக்குறபோது, நீனு எவனுக்கும் மொய்கூட வச்சிருக்க மாட்டீனு தெரியுதுண்ணேன். அதேன் காரமடை சோசியறு கருணைன்றது.

ஆங், மேட்டருக்கு வாறேன்.
அதாவது, மொண்ணைங்கள பலவகையாப் பிரிக்கலாம், காற்றுப் பிரிவதுபோல். அதாவதுண்ணே, சத்தமா நாத்தமில்லாம, இல்ல சத்தமில்லாம நாறிப்போயி.
ஆனா, நாம பேசப்போற மொண்ணைங்க சத்தமாவும், நாத்தமாவும் காற்றைப்பிரிப்பவர்கள்.
இப்போ புரிஞ்சுதோ?
தெரியும்ண்ணேன், உனக்குப் புரியாம இருந்தாத்தேன் அதிசயம்.
சரி கண்ணத்தொடச்சிட்டு அடுத்த பாராவுக்குப் போ.
“எழுதறவன் எழுத்தாளன். அவனுக்குப் பணம் வருது. சிலே போறான், பொண்ணுங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்கறான், பிச்சை எடுக்கறான், டைரக்டர்ட்ட பல்ல இளிக்கறான், பெரியவர திட்டுறான் அப்புடி இப்புடின்னு திடும்னு கெளப்பிவுட்டாங்க; சொல்லப்போனா அவுனங்களே கெளப்பி வுட்டானுக.

எந்தக் கருமம் எப்புடிப் போனா, உனக்கென்ன? இல்ல எனக்கென்ன? இல்ல இந்த ஊருக்குத்தான் என்ன?”

ஆதலால், மூடிட்டுப் போயி வெவசாயம் பண்ணுற வழியப் பாக்கவும்.

வெ


டிஸ்கி:- இந்த மரணத்தைப் போல், வேறெந்த மரணமும் என்னைப் பாதித்ததில்லை. மிஸ் யூ சாரே!

டிஸ்கி1:- மேலே கண்ட டிஸ்கியைப் பற்றி விவாதிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, October 30, 2011

குழப்பம் (சவால் சிறுகதை-2011)


குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.

சிவா தன் கையில் இருந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் விஷ்ணுவின் அழைப்பு வரவும், தன் தலைமுடியைக் கோதிவிட்ட இடக்கையால் போனைப் பார்த்தான். அதில் தன் பிம்பம் காட்டும் ஸ்க்ரீனை வெறித்தபடி, மீண்டும் குழப்பத்தில் ஆள்ந்தான்...

இதற்குள், இந்தக் கதைக்கு சம்பந்தமான ஆளுங்களைப் பார்த்திடுவோம்.
விஷ்ணு- இவன் ஒரு கல்லூரிப் பையன். மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படிப்பதாக ஞாபகம். சிவா ரூட் விடும் பெண்ணின் பக்கத்து வீடு என்பதால், இவனை கடந்த இரண்டு வருடங்களாகக் சிவாவுக்குத் தெரியும்.

எஸ்.பி. கோகுல்- சூலூர் சமஸ்தானத்திலே பழனிச்சாமி- உமா ஆகியோரின் ஒரே மகன். பெரிய அரசியல்வாதி. ஆங், இவர்தான் சிவா ரூட் விடும் பிகரின் அப்பா. 

கீதா- இவள்.... இவள்..... சிவாவின் கனவுக் கண்ணி. எஸ்.பி.கோகுலின் உயரத்தையும், பேரழைகையும் கொண்டிருந்தாள். கொஞ்சம் மாநிறம். எனினும், சிவாவுக்கு அவளைப் பிடித்தே இருந்தது.
“வருத்தமற்ற நொடிகள்
ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,
உன் செவ்விதழ் சிந்தும்
முத்தத்திற்காய்!”
என்றெல்லாம் அவனைக் கவிதை எழுத வைத்த வித்தைக்காரி.

இப்போ, சிவாவின் குழப்பத்துக்குக் காரணம் தேடிப் போவோமா?

பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிவா தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். அவளும் சம்மதிக்கவே, நிதமும் அவளுடன் கடலை போட்டுவந்தான். சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், அவளின் பிறந்தநாள் வந்தது. அவனும் அவளுக்கு ஒரு செல் போன் வாங்கி பிரசண்ட் பண்ணினான்.

அதுல வந்தது வினை. பிறந்தநாளுக்கு அடுத்த ரெண்டு நாள், புது போனுல கடலை போச்சு. இப்போ, அந்த போனு அவிங்க அப்பன் கையுல. பொறவுதான் அவிங்க அப்பன் கூப்பிட்டான் சிவாவை. போச்சு, தெரிஞ்சு போச்சு. அதனால குடும்பத்தோட போயிப் பொண்ணுக் கேட்கப் போயிட்டான் சிவா.

ஒரு வழியா கண்ணாலத்துக்கு ஏற்பாடும் ஆயிடுச்சு. பொறவு? அரசியல்வாதியின் மக ஆச்சே. ஓடிப்போயிக் கண்ணாலம் பண்ணுனா கேவலம்னு, அரேஞ்சுடு மேரேஜூக்கு சம்மதம் சொல்லிட்டாரு.

இப்புடியான நெலைமைலதான், விஷ்ணு இப்புடி ரெண்டு துருப்புச்சீட்ட தயாரிச்சு இருக்கான். அவன் பர்சு, சிவாவோட பேக்ல வச்சிருந்ததாலையும், அடுத்தவன் பர்சனல நோண்டுற புத்தி இருந்ததாலையும், இந்த ரெண்டு சீட்டும் கெடச்சுது சிவாவுக்கு.

மீண்டும் விஷ்ணுவின் கால். இரு விஷ்ணுவையே கேப்போம்னு அட்டெண்ட் பண்ணினான் சிவா. “ஹலோ” என்ற சம்பிரதாயமான வார்த்தையை உதிர்த்தான் சிவா.

இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.

சிவா, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) என்பதையும், மற்றொரு சீட்டு, சிவாவின் பரம எதிரி தினகருக்கு (சிவாவின் ஆளை கண்ணாலம் பண்ண முன்பு ஒரு காலத்தில் ரூட் போட்டவன்) என்பதையும் சிவா கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.

கதை முடிவு இது தான். சிவா எப்படி என விஷ்ணுவிடம் கேட்க, அவன் பிறகு சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, தினகருடன் சேர்ந்து கண்ணாலத்தை நிறுத்த பிளான் பண்ணி இருந்தான்(அவனுக்கு என்ன பொறாமையோ?). அதனால், சிவா ஒரு குடிகாரன் என்ற பொய்யைக் கொண்ட ஒரு குறிப்பால் உணர்த்த விரும்பினான் விஷ்ணு. மற்றொரு சீட்டை, தினகருக்கும் அனுப்ப எத்தனித்தான் போலும். பாவம், அவர்களின் திட்டம். இப்போது அந்தச் சீட்டுகள் சிவாவைக் குழப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

சிவா-கீதா திருமணம் இனிதே முடிவுற வாழ்த்துக்களுடன்,

-வெளங்காதவன்.