இணைப்பில்

Thursday, July 4, 2013

முத்தாய்ப்புஇடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

கட்.

இடம்- நெகமம்.
நாள்- மிகச்சரியாக இருபத்தைந்து வருடத்துக்கு முன்பு.

“பாருடி. நம்ம பையன் மொதோ ரேங்கு வாங்கியிருக்கான்”, சரசுவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கருப்புசாமி.
“ஆமா, இங்க பாத்திரங்கழுவ நேரமில்ல. படிக்கிறதப் பாக்க நான் வாரேன்”, இருந்த வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தாள் சகதர்மினி.
“எங்கப்பந்தான் என்னிய படிக்க வக்கில.இவனாவது படிக்கவச்சு பெரிய ஆளா வரட்டுமே” தாயின் பேச்சைக் கேட்டு தளர்வாயிருந்த மகனை அரவணைக்கும்படி பேசினான் கருப்பு.
அந்தக் குடிசைக்குக் கதவெல்லாம் இல்லை. அடுப்புப் புகை கண்ணை கசக்க வைக்கும். ஆனாலும், கணேசன் பளீரெனச் சிரித்தபடி விளையாடப்போனான்.
“எங்க அப்பனை என்னால வச்சுக் காப்பாத்த முடியலை. இவன் படிச்சாவது நம்மைக் காப்பாத்தட்டுமே” மனைவியின் பதிலை எதிர்பாராமல் கருப்பு பேசியது முனகலாக கணேசன் காதுக்கு எட்டியது.

கட்.

இடம்- கோவை.
நாள்- இரண்டாயிருத்துப் பத்தின் ஆறாவது மாதத்தின் ஒரு வாரநாள்.

“யூ ஆர் செலக்ட்டேட்; கங்க்ராஜுலேசன்” நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான் கணேசன்.

“தேன்க்யூ வெரிமச் சார், தேன்க் எ லாட்” வார்த்தை வராமல் நீர் மல்கப்பேசினான். கையை நீட்டியவர் அவன் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்

இடம்- செஞ்சேரிமலை
நாள்- இரண்டாயிரத்துப் பன்னிரண்டு, கூதிர்கால மாதக் கடைசி.

“பெரியவா யாராவது வந்திருந்தா கூப்பிடுங்கோ. தாலி எடுத்துக்கொடுக்கணும்” ஐயர் அடிநாதமாக முழங்கினார்.
“வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றோம் சாமி; நீங்களே தாலி எடுத்துக் கொடுங்கோ”வென வேண்டினான் கணேசன்.
அனைத்தும் முடிந்து, அவன் இல்லை இல்லை, அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

கட்

இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

-வெளங்காதவன்