இணைப்பில்

Thursday, October 9, 2014

ஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்

முதலில் இதை வாசித்துவிட்டுத் தொடரவும்.


அன்பின் பிச்சை,
உமது தளத்தில் வெண்முரசின் ஒரு பகுதியாம் 'நீலம்' பற்றிய உமது கேள்விகளையும் ஜெயனின் பதில்களையும் பார்த்தேன்.
 'எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல' என்ற அ.மி.யின் கருத்தை ஜெயன் எடுத்தாண்டது சரியெனவேபடுகிறது. நமது உரையாடல்களின் முனைகள் இந்தப் புள்ளியில்தான் சந்திக்கின்றன என நினைக்கிறேன். ஆனால், ஜெயனின் 'நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன்' என்பதிலுள்ள பொதுவான ஒரு பிரிவினைபற்றிக் கடித உரையாடலாகத் தொடரலாமென்றிருக்கிறேன்.
     பொதுவாகவே, அனைத்து இலக்கியங்களும் இலக்கைச் சுவைபட இயம்புவதைப்போலவே, ‘அறம்எனும் மையக்கூறினைச் சுற்றியே நகர்வதை உணர்ந்திருக்கலாம். எவ்வாறெனில், கள்வனெனில் ஒழுக்கம் எனும் அறத்திலிருந்து பிறழ்ந்தவன்; காவலனெனில் தனதொழுக்கத்தால் அமைதியெனும் அறத்தைக் காப்பவன். மட்டுமல்ல, கற்பு, நெறி, சீர்(ஒழுங்கு), ஏர், போர் இவையெல்லாமே அறத்தைப் பற்றியவையாகவே இருக்கின்றன, அவை அறத்திலிருந்து பிறழ்ந்திருந்தாலும்!

     அறமென்பது மீபெரும் உருவாக்கம். அன்பு, பாசம், பந்தம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, உவகை, காதல், காமம், அமைதி இன்னும் இன்னும் பலவற்றால் பின்னப்பட்ட மூங்கில் பந்து. ஒவ்வொரு நேர்கோட்டு இணுங்கியாலும் கட்டப்பட்ட கோளப்பந்து. எந்தப்படைப்பிலும், எழுத்தாளனானவன் அக்கோளப்பந்தின் ஏதுமொரு இணுங்கியைக் கிள்ளி, அவனது பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையின்றியோ அதனை மையப்படுத்தியோ, விலகியோ இயங்கி வாசகனின் அகவுணர்வைத் தூண்டி தனது படைப்பை நிலைநிறுத்துகிறான்.

     இந்த இணுங்கியைப் பற்றிய சுயநிலைப்பாடுதான் ஜெயன் சொன்ன அந்தப் பிரிவினை என்று நினைக்கிறேன். இன்னும் கூர்தீட்டிச் சொல்லவேண்டுமெனில், அன்பெனும் அறத்தில் பிச்சையாகிய உமக்கு உயிர்க்கொலை பாவம்என்ற நிலைப்பாடு; எனக்கோ மீன், கோழி மற்றும் ஆடுகள்வரை கொள்ளலாம். தவறொன்றுமில்லைஎனும் நிலைப்பாடு.

     இதுமாதிரியான நுண் உணர்வுகளின் நிலைப்பாட்டு வேற்றுமைகள்தான் ஜெயன் சொல்லும் பிரிவினை(களு)க்குக் காரணமென்றும் எண்ணுகிறேன். இந்தமாட்டில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு படைப்பு, பல்வேறு நிலைப்பாட்டை இயம்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் பரிதாபம் என்னவெனில் இந்தப் பிரிவினைகளை எற்றுக்கொண்டவாறே ஒரு படைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் போதும். அதுவே இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; இதில் ஃபேக், ஒரிஜினல் என்ற பேச்சுக்கே இடமில்லை.  

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

மேலும் எழுதுவோம்.

Friday, January 17, 2014

கொசு பிடிப்பவன்

கொசு பிடிப்பதில் நான் வல்லவனாகிவிட்டேன். ஆம், நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள். அடிப்பதிலள்ள, பிடிப்பதில்தான். ஆல்கஹாலேரிய என் ரத்தத்தைக் குடித்த கொசுக்கள், காற்றில் மிதந்துவரும் அழகே அழகு. என் பிரியக் கொசுக்கள் வலிக்காமல் ரத்தம் உறிஞ்சுவதில் வல்லவை. என் அறையின் சிலந்தி வலைகளினூடே ஒரு தேர்ந்த விமானியைப் போல, தன் உடலைச் சுமந்து பறந்து செல்ல என் பிரியக் கொசுக்களால் மட்டுமே முடியும்.

கதவுச் சந்து, சன்னல் என்றெல்லாம் இல்லை. என் அறை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றன என் பிரியக் கொசுக்கள். என் அலமாரியின் ஒரு பகுதியை அவற்றிற்காகவே ஒதுக்கிவைத்திருக்கிறேன்.

அவை என்னுடன் பேசும் மொழியில், அந்தக் குழந்தைத்தனத்தில், அந்த வருடலில், அட அட அட... என்னே சுகம்.

ஏழு ஸ்வரங்களில், ரீங்காரம் என் பிரியக் கொசுக்களிடமிருந்தே பிறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இரவு நேரங்களில் அவை என்னுடன் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. நேரே வந்து என்னில் அமர்ந்து, வலிக்காமல் ரத்தமெடுத்துச் செல்லும். ரத்தம் குடித்த போதையுடன், அவை நன்றாக ஆடும். அதுவும் அந்த "அப்படிப்போடு.. போடு.." பாடலுக்கு அவை ஆடிய ஆட்டமிருக்கிறதே! கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்.

காலை நேரங்களில் என் பிரியக் கொசுக்களின் சங்கீதம் ஆரம்பமாகிவிடும். பாடுவதற்கு முன்பு சுதி சேர்ப்பதுபோல், தொண்டையைக் கனைப்பதுபோல் பற்பல முஷ்தீபுகளைப் பண்ணும். பின் "மானச சஞ்சரரே" என்று ஆரோகணிக்க ஆரம்பிக்கும். கண்களைக் கூர் கொண்டு பார்த்தால், அவற்றில் ஒரு கொசு 'கொன்னக்கோல்' பிடித்து ஜதி சொல்லிக்கொண்டிருக்கும்.

அட..அட...அட....

அந்தக் காட்சியை சொல்லால் விவரிக்க முடியாது.

"பரிபுரிதா முரளி" என்னும்போது அவற்றின் சாரீரம் உச்ச ஸ்தாயில் போகும். என்னே ஆலாபனை, என்னே விஸ்தரிப்பு!

என் பிரியக் கொசுக்களிடம், பிரியம் என்றுமே குறைந்ததில்லை; அவை முதலில் வலிப்பதுபோல் கடித்தபோதும்கூட.

 இப்பொழுதெல்லாம் என் கொசுக்களின் போதையாட்டம் வெறியாக மாறிவிட்டது போலும். திடீர் திடீரென அடித்துக்கொள்கின்றன. பாடலுக்கேற்ற லயம் தப்புகின்றன. குடிக்கும் ரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு மிகுந்திருக்குமென்று எண்ணிக்கொண்டேன்.

என் பிரியக் கொசுக்கள் இப்போது துவண்டு துவண்டு விழுகின்றன. அதைப் பிடித்துப் பிடித்து நானும் வல்லவனாகிப்போனேன். என் பிரியக் கொசுக்களைப் பிடிக்க நான் இருக்கிறேன்.

என்னைப் பற்றிப்பிடிக்க எவர் வருகிறீர்?