இணைப்பில்

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, July 4, 2013

முத்தாய்ப்பு



இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

கட்.

இடம்- நெகமம்.
நாள்- மிகச்சரியாக இருபத்தைந்து வருடத்துக்கு முன்பு.

“பாருடி. நம்ம பையன் மொதோ ரேங்கு வாங்கியிருக்கான்”, சரசுவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கருப்புசாமி.
“ஆமா, இங்க பாத்திரங்கழுவ நேரமில்ல. படிக்கிறதப் பாக்க நான் வாரேன்”, இருந்த வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தாள் சகதர்மினி.
“எங்கப்பந்தான் என்னிய படிக்க வக்கில.இவனாவது படிக்கவச்சு பெரிய ஆளா வரட்டுமே” தாயின் பேச்சைக் கேட்டு தளர்வாயிருந்த மகனை அரவணைக்கும்படி பேசினான் கருப்பு.
அந்தக் குடிசைக்குக் கதவெல்லாம் இல்லை. அடுப்புப் புகை கண்ணை கசக்க வைக்கும். ஆனாலும், கணேசன் பளீரெனச் சிரித்தபடி விளையாடப்போனான்.
“எங்க அப்பனை என்னால வச்சுக் காப்பாத்த முடியலை. இவன் படிச்சாவது நம்மைக் காப்பாத்தட்டுமே” மனைவியின் பதிலை எதிர்பாராமல் கருப்பு பேசியது முனகலாக கணேசன் காதுக்கு எட்டியது.

கட்.

இடம்- கோவை.
நாள்- இரண்டாயிருத்துப் பத்தின் ஆறாவது மாதத்தின் ஒரு வாரநாள்.

“யூ ஆர் செலக்ட்டேட்; கங்க்ராஜுலேசன்” நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான் கணேசன்.

“தேன்க்யூ வெரிமச் சார், தேன்க் எ லாட்” வார்த்தை வராமல் நீர் மல்கப்பேசினான். கையை நீட்டியவர் அவன் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்

இடம்- செஞ்சேரிமலை
நாள்- இரண்டாயிரத்துப் பன்னிரண்டு, கூதிர்கால மாதக் கடைசி.

“பெரியவா யாராவது வந்திருந்தா கூப்பிடுங்கோ. தாலி எடுத்துக்கொடுக்கணும்” ஐயர் அடிநாதமாக முழங்கினார்.
“வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றோம் சாமி; நீங்களே தாலி எடுத்துக் கொடுங்கோ”வென வேண்டினான் கணேசன்.
அனைத்தும் முடிந்து, அவன் இல்லை இல்லை, அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

கட்

இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

-வெளங்காதவன்

Tuesday, June 26, 2012

நாடு நாசமாப்போவட்டும்!





சோமாறி நாயுங்க!
ஒரு இந்தியப் பிரஜைய/பொருளாதாரத்தக் காப்பாத்த வக்கில்லா, இவனுங்க ஐரோப்பா பொருளாதாரத்தைக் காப்பாத்தப் போறானுங்கலாம்.

உங்களைத்தாண்டா!
ராமேசுவரத்துல இலங்கைக்காரன் சும்மா சுத்தி சுத்தி அடிக்குறான். நீங்க சுவத்துல சாஞ்சுட்டு நிக்கிறீங்களே முதுகெலும்பு இல்லாதவிங்களா..

என்னமோ போங்கடே!
இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சப்பவே உங்க கட்சிக்காரனே சொன்னான், “காங்.க கலச்சிடலாம்”னு.

எல்லாம் உங்க பாட்டன் பூட்டன் பண்ணுன விதிப்பயன், நாங்க அனுபவிக்க வேண்டியதா இருக்கு!

சத்தியமா சொல்றேன்.... உங்களுக்கு மட்டுமில்ல, உங்க வம்சமே நாசமாப் போகும்.. போயிடும்...

நீங்கெல்லாம் சேந்து மக்களையும் மக்களாட்சியையும் படுகொலை பண்ணுறீங்கடா!

-வெளங்காதவன்

Monday, June 18, 2012

ஜனநாயகம்-கவுஜ!!




நான்கிற்கடுத்தே வரும்,
மையுரிமை!
காந்தி சிரிப்பில் தொலைக்கிறோம்
வாக்குரிமை!
சீமைச் சரக்குகளோடே-
சீவிய சிந்தாமணிகளும்,
சிக்கெடுத்த சிங்காரிகளும்,
சிரித்துச் சிரித்துக் கும்பிடுவர்!
பெண்டிர் எனில் மூக்குத்தி,
பெரிதாயொரு குடம், புடவைகளும்- இப்போதெல்லாம்,
ஃபுல் பாட்டில் பீரும்!
சுத்தமாகும் ரோடும்,
சுமோக்களின் பாடும்!!
ஓட்டுக்கு ஓராயிரமென காலம் மலையேறி,
ஒன்றிரண்டாகி ஒரு கட்சி பலவாகி,
பல இணைந்து ஒன்றாக்கி ஆடுவார்கள் ஆட்டம்!!!
பச்சைக்குதிரை என்று பசபசக்க நின்றிருந்து,
விரலில் மைதடவி,
ஓங்கி ஒரு குத்து வைத்து,
வெளியே வரும்போது, ஒரு பாக்கெட் பிரியாணி!
ஆனதெல்லாம் உன்கணக்கு ஐயாயிரம்!
ஐந்தாண்டு உன்பாடு திண்டாயிடும்!
விலையேற்றம், தட்டுப்பாடு, பணவீக்கம்
பலபேசி உந்தலையில் மிளகரைப்பர்!
எதுவென்னவிலை ஏற்றமாகிவிடினும்,
குவாட்டர் மட்டும்
குடித்துவிட்டு, குப்புறப்படு!



Wednesday, December 7, 2011

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்...

       "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

      ஆக்கம் எவனோ உயிர்க்கு."

என்று கூறிய வள்ளுவனை வன்மையாகக் கண்டித்து, எனது உரையைத் தொடங்குகிறேன்.

வலையுலகில் சஞ்சரிக்கும் சராசரி தாண்டிய ஜீவன்களே!!!! நீங்கள் மத, இன துவேஷங்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் செல்லும் பாதை சரியல்ல. இது போன்ற துவேஷங்களைத் தடை செய்யக்கோரி நாங்கள் சமூக வலைதளங்களைக் கண்டிக்கும் அதே வேளையில், அவர்களாகவே சென்சார் செய்து வெளியிட நிர்பந்திக்கிறோம். இல்லையெனில், எங்கள் அன்னை தலைமையிலான ஆட்சியில், அதற்காக விதிமுறைகளை உருவாக்குவோம்.

உண்மையைச் சொன்னால், மத இன துவேஷங்களைச் செய்வதாலே இதைச் செய்கிறோம் என எங்கள் கருத்துக்கு வரவேற்புத் தரும் அனைவருக்கும், இன்கம் டேக்சை குறைக்க வழிவகை செய்யும் சட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆனால், காமன்வெல்த் ஊழல், 2G ஊழல், கம்யூனிகேசன் இணைப்பு, சுரண்டல் இந்த வார்த்தைகளை உபயோகித்துச் செய்தி பரப்புபவர்கள் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளவும், சட்ட ஆலோசகர்களை வைத்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முன்னணிப் பத்திரிகைகள் பல எங்களிடம் விலைபோயிவிட்டதால், இனி, இந்தியாவில் செயல்படும் பல சமூக வலைதலங்களையும் நமது கட்சியோ, அல்லது அரசோ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விற்கத் தயங்கும் தள அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, தனி குண்டர் படை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மீடியா என்ற கேட்டகிரியில் வரவே வராது; அது நட்பு வட்டம், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கலை இவற்றையெல்லாம் தாண்டி டேட்டிங் வரை பறந்து விரிந்துள்ளது. இவ்வாறான, வலைகளில் அரசியல் பேசுவது குற்றம். அவ்வாறு பேசினாலும், எங்கள் பிரதமர், அன்னை போன்றோரைப் பற்றிய தவறான படங்களை வெளியிடுதல் மிகப்பெரும் குற்றம்.

இந்தியாவுக்கு இதற்கா சுதந்திரம் கொடுத்தான் வெள்ளையன்? இதற்காகவா மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போன்றோர் பாடுபட்டனர்? இதற்காகவா நம் “காங்கிரஸ்” தோற்றுவிக்கப்பட்டது?

இல்லை.. இல்லை... இல்லவே இல்லை.....

ஆகவே, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க சமூக வலைகளில் நம் அரசின் தலையீடு அவசியமாகிறது. இது ஏன் எனக் கேட்கத்துடிக்கும், பா.ஜ.க. க்காரர்களிடம் கேட்கிறேன், “உங்களைப் பற்றிய அவதூறுகளை எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வீர்?”. எனினும், நீங்கள் வெளியிடும் பவர் ஸ்டார், கேப்டன் மற்றும் அணில் போன்றோரின் படங்கள் சென்சார் இன்றி வெளியிடவும் ஆவண செய்யப்படும்.

ஒரே செய்தியை அழுத்திக் கூறுவதால், அது பொய்யாக இருக்குமோ என்று தொண்டர்கள் எண்ணுவது அச்சமாக இருக்கிறது. திரும்பத் திரும்பக் கூறுவது, அதன் அவசியத்தை வலியுறுத்தவே.

ஆனால், இந்தச் சமூக வலைதளங்களுக்கு என்னவொரு ஏளனம்? நாம் நடத்தும் ஆட்சியில், நமது கோட்பாடுகளை ஏற்காமல், “அமெரிக்காவில் எப்படியோ இங்கும் அப்படி” என்னும் ஏகாதிபத்திய மனநிலையில் அவர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் தொண்டர்களாகிய நீங்கள் நினைப்பதுபோல் இம்மீடியட்டா ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போம்.

சமூக வலைத்தளங்களின் அராஜகம், நமது ஆட்சியில் ஒழியப்போகிறது என்று நினைத்தால், அனைத்து உறுப்புகளுள் சந்தோசத்தில் சிறகடித்துப் பறக்கின்றன.

ஆதலால், அனைத்து வலையுலக சஞ்சரிகளே!!!!

அன்னையின் தலைமையில் ஒன்றிணைவோம்...

எதிர்த்திடுவோம் அராஜகத்தை.....

ஒழித்திடுவோம் சமூக வலைத்தளங்களை!!!!!!!



வாழ்க ஜனநாயகம்.....

இங்ஙனம்,

அடிப்பொடி காங்கிரஸ் தொண்டன்,

வெளங்காதவன்.