இணைப்பில்

Wednesday, October 2, 2013

கொலை


இறக்கை இதழில் வந்த கதை.


சாயமேறிய அந்த நரையெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லைதான். ஆனாலும், நான் அவனைக் கொன்று கொண்டிருந்தது பிரச்சனையாக இருந்திருக்காது. பிரச்சனைகள் தீர்க்க இயலாமல்தான் என்னை நம்பி, கைக்கொண்டான். 
நான் அவனை தேர்ந்த கலைஞனைப்போல் கொன்று கொண்டிருந்தேன். அவன் தொண்டைதான் முதற்குறி. தொண்டை கமறக் கமறக் கொல்வது தனிச்சுகம். தொண்டை தாக்கிக் கொல்லவியலாமல் கொஞ்சம் நுரையீரல், கொஞ்சம் குடலெனப் பிரித்துக் கொண்டு கொல்லத் துவங்கினேன்.
இதோ, குடலிலிருந்த அமிலமெல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அமிலங்களின் வெம்மையால் அவன் வெகுநாட்களாக உண்டிருக்கமாட்டான் என உணரும்போதே, குடல் அமிலங்கள் மிக அடர்த்தியாக என்னைச் சூழ்ந்துகொண்டது.
அன்றொரு நாள் நான் கொன்றவன் பிரியாணி உண்டிருந்தது தூர மேகத்தின் நிழலாய் வந்துபோனது.
ஆம்...
நான் கொலைகாரன்தான். ஊரிலுள்ள எவரையும் கேளுங்கள். என்னைக் கொலைகாரனென்றே சொல்வார்கள். என்னைப் பிடித்து சிறையில் தள்ள எவனுக்கும் தைரியமில்லை. கொலைகளை ரசித்துச் செய்பவன். அந்தக் கொலைகளில்தான் என் ஆனந்தமிருக்கிறது. 
மீந்த நேரங்களில், அமைதியான நீரைப்போல் ஒரேயிடத்தில் அடைந்து கொண்டு. ஆனாலும், கொலை செய்வதென்றால் எட்டடிப்பாய்ச்சல்.
நான் கொல்ல முயற்சி செய்து, பிழைத்தவர்களில் இவனொருவனல்ல. 

ஆம், என் பணியை நான் மிகச் சிரத்தையாக, சிரமின்றியே நிறைவேற்றிவிடுவேன்.
ஒருவழியாய் என்னைக் கண்டு ஒழிந்துகொண்ட இவன் உயிரையும் குடித்துவிட்டேன். 
இதோ, நானும் மரிக்கப் போகிறேன். 
ஆம். என்னால் இறந்தவனின் இறுதிநாளே, எனது இறுதி நாளுமாம்.
கொன்றவனின் கை, கால், இதயமெங்கும் தாக்கி சக்கரவியூகத்தை உடைக்கத்தெரியாத அபிமன்யுவைப் போல, இந்த உடலிலேயே இறந்துவிடப்போகிறேன், விஷமாகிய நான்!

-வெளங்காதவன்

3 comments:

Robert said...

சிறப்பாய் இருக்கிறது.

Robert said...

இப்படியெல்லாம் ரோசிப்பிங்களா மிஸ்டர். வெளங்காதவன் !!!

திண்டுக்கல் தனபாலன் said...

இயக்கம் : இலக்கியச்செம்மல் ‘வெளங்காதவன்’....???

visit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html