இணைப்பில்

Thursday, November 7, 2013

Writer அதாவது எழுத்தாளர்மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர். தமிழில் மட்டும் முப்பது புத்தகங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த முப்பது புத்தகங்களையும், தன் முப்பது வயதிற்குள் எழுதிமுடித்திருக்கிறார். உலக மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழ் மொழியிலிருந்து உலகமொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வது அவருக்குக் கைவந்த கலை.

அவரின் தோற்றத்தையோ, உடையின் நிறத்தையோ, போட்டிருக்கும் கண்ணாடியின் விலையையோ உங்களுக்கு நான் கூறப்போவதில்லை. அவ்வாறு கூறி, கதையின் பக்க அளவை நீட்டி முழக்குவதில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை.

கதையென்றால் அதன் போக்கில் எழுதவேண்டுமென்று எகிப்திய எழுத்தாளர் முஷ்கர் டி சொல்லுவார். முஷ்கர் அல்லது டி எழுதியவையனைத்தும் ஆகச்சிறந்த இலக்கிய முத்துக்கள். முஷ்கருடைய படைப்புகளில், தேவையின்றி ஒரு காற்புள்ளியோ, இல்லை அரைப்புள்ளியோ இடம்பெறாது. ஒரு சிற்பி, சிலையைச் செதுக்குவதுபோல் பார்த்துப் பார்த்து இலக்கியம் படைத்தவர்.

அவரின் மரணமும், மிகச் சுவாரஸ்யமான ஒன்று. சாவில் என்ன சுவாரஸ்யமென்று கேட்காதீர். அவருடைய எழுத்தைப்போலவே, அவரது மரணமும் இலக்கியத்தனமானதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தன் அறுபதாவது வயதில், தன் மூன்றாம் மனைவியுடன் கட்டிலின்பம் பெறும்போது உயிர் போய்விட்டதாம். கேட்கும்போதே “உச்” கொட்டத் தோன்றுகிறதா? கொட்டிவிடுங்கள்.

ஐயடா... 

நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை முஷ்கர் டி யைப் பற்றியதல்ல. இக்கதை நம் தமிழ் எழுத்தாளர் பற்றியது. நாற்பது வயதைக் கொஞ்சம் நரையுடன் நெருங்கிக்கொண்டிருக்கிறார். முன்பொருகாலத்தில் மீசை வைத்திருந்தார். இப்போதெல்லாம், மீசையை மழித்துவிடுவார் போலும்.

இதோ, கதையின் கருவுக்கே திரும்பிவிடுவோம்.

ஆம், நம் எழுத்தாளர் மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

அவரின் திருமணத்துக்கு முன்புவரை, இலக்கியம், உரை, பத்தி என விரிந்த எழுத்துக்கள், இப்போதெல்லாம் மளிகைக் கணக்கு, வரவு செலவுக் கணக்குகள், குழந்தையின் வீட்டுப்பாடம் எனச் சுருங்கிப்போயிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.

அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான். அரக்கியாய் இருந்திருந்தால், மேலே சொன்ன மளிகை, வீட்டுப்பாடம் போன்றவற்றை எழுதத்தான் சொல்வாளா? பேனாவைக் கையிலேடுத்தாலே மூச்’சென்று கத்தியிருப்பாள். முடிந்தால், பூரிக்கட்டையால் அடித்தே, எழுத்தாளரின் கையை முறித்திருப்பார். அதனால்தான் சொல்கிறேன்,
”அவரின் துணைவியார் அவ்வளவு பெரிய அரக்கி இல்லைதான்.” 

அவரது புத்தக வெளியீடுகள் எல்லாம், ஊரின் மீப்பெரும் உணவகங்களில் அல்லது கடலின் நடுவே அல்லது வானத்தில் பயணித்தபடியே அல்லது மலையின் உச்சியிலே அல்லது.....
இப்படி எங்கேனும் வித்தியாசமான இடங்களில் நடந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை புளியமரத்தின் உச்சாணிக் கொம்பிலேறி வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான எழுத்தாளர்தான், மிகுந்த அசூயையுடன் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆறு வருடங்களாக, அதாவது, திருமணத்துக்குப் பின், இலக்கியங்கள் படிப்பது சுத்தமாக நின்றேவிட்டது, அவர் எழுதுவதை நிறுத்தியதைப்போல். காரணம்தான் தெரியுமே. ஆம்....
அவரது சகதர்மினியேதான்.

இவர் அவளுக்குத் தெரியாமல் தினசரி கூட படிக்க முடியாத நிலை. அவருக்குப் பேனா வேண்டுமென்றால்கூட மனைவியிடம்தான் கேட்கவேண்டும்.

அவரது மனம், இப்போதெல்லாம் புழுப்போல நெளிந்துகொண்டிருக்கிறது. தெரிந்ததை எழுதமுடியாமல், தெரியாததைப் படிக்கமுடியாமல்.......
மக்களை அடிமைப்படுத்தும் முறைகளில் திருமணமும் ஒன்று. அதை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டுமென புழுங்கிக்கொண்டிருக்கிறார். அடிமையின் ஓலமாக, அவரின் இயலாமை நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

நடைபிணமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

என்றேனும் ஒருநாள் அவர்தம் மனைவி அவரை வீட்டில் விடுத்துப் போகட்டும், அந்த நன்னாளிலாவது அவளின் கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார், நம் எழுத்தாளர்.

-வெளங்காதவன்.

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//கோலப் புத்தகத்தை, பிரஞ்ச்சில் மொழிபெயர்த்துவிட வேண்டுமென்று பொருமிக்கொண்டிருக்கிறார்//

கோலாம் மாதிரி இருந்தாலே அது வேற மொழிதேன் ராசா..

:)

நாய் நக்ஸ் said...

அந்த ரைட்டர் மாதிரியே ஒன்னும் பிரியலை.....

செங்கோவி said...

அடேங்கப்பா..எவ்ளோ குறியீடு!

கோவை ஆவி said...

நீங்க செம்மயா (செம்மையா) பெயர்த்துட்டீங்க.. :)

காட்டான் said...

இது நம்ம சாரு இல்லைத்தானே?

முட்டா நைனா said...

கிலோ கண்க்க்ல பொடி வச்சு சொல்லிக்கினபா... வெளங்காதவன் சொல்லி இந்த முட்டா நைனா வுக்குப் பிரிஞ்சி... வெளங்கினா மாரிதான்...
(அப்பால... ஐ ஆம் எ அப்ப்ரசண்டுபா... டைமு கெட்ச்சா நம்ப கடையாண்ட ஒரு விசிட்டு குடுபா...)