இணைப்பில்

Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Thursday, October 9, 2014

ஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்

முதலில் இதை வாசித்துவிட்டுத் தொடரவும்.


அன்பின் பிச்சை,
உமது தளத்தில் வெண்முரசின் ஒரு பகுதியாம் 'நீலம்' பற்றிய உமது கேள்விகளையும் ஜெயனின் பதில்களையும் பார்த்தேன்.
 'எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல' என்ற அ.மி.யின் கருத்தை ஜெயன் எடுத்தாண்டது சரியெனவேபடுகிறது. நமது உரையாடல்களின் முனைகள் இந்தப் புள்ளியில்தான் சந்திக்கின்றன என நினைக்கிறேன். ஆனால், ஜெயனின் 'நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன்' என்பதிலுள்ள ‘பொதுவான ஒரு பிரிவினை’ பற்றிக் கடித உரையாடலாகத் தொடரலாமென்றிருக்கிறேன்.
     பொதுவாகவே, அனைத்து இலக்கியங்களும் இலக்கைச் சுவைபட இயம்புவதைப்போலவே, ‘அறம்’ எனும் மையக்கூறினைச் சுற்றியே நகர்வதை உணர்ந்திருக்கலாம். எவ்வாறெனில், கள்வனெனில் ஒழுக்கம் எனும் அறத்திலிருந்து பிறழ்ந்தவன்; காவலனெனில் தனதொழுக்கத்தால் அமைதியெனும் அறத்தைக் காப்பவன். மட்டுமல்ல, கற்பு, நெறி, சீர்(ஒழுங்கு), ஏர், போர் இவையெல்லாமே அறத்தைப் பற்றியவையாகவே இருக்கின்றன, அவை அறத்திலிருந்து பிறழ்ந்திருந்தாலும்!

     அறமென்பது மீபெரும் உருவாக்கம். அன்பு, பாசம், பந்தம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, உவகை, காதல், காமம், அமைதி இன்னும் இன்னும் பலவற்றால் பின்னப்பட்ட மூங்கில் பந்து. ஒவ்வொரு நேர்கோட்டு இணுங்கியாலும் கட்டப்பட்ட கோளப்பந்து. எந்தப்படைப்பிலும், எழுத்தாளனானவன் அக்கோளப்பந்தின் ஏதுமொரு இணுங்கியைக் கிள்ளி, அவனது பிரக்ஞையுடனோ அல்லது பிரக்ஞையின்றியோ அதனை மையப்படுத்தியோ, விலகியோ இயங்கி வாசகனின் அகவுணர்வைத் தூண்டி தனது படைப்பை நிலைநிறுத்துகிறான்.

     இந்த இணுங்கியைப் பற்றிய சுயநிலைப்பாடுதான் ஜெயன் சொன்ன அந்தப் பிரிவினை என்று நினைக்கிறேன். இன்னும் கூர்தீட்டிச் சொல்லவேண்டுமெனில், அன்பெனும் அறத்தில் பிச்சையாகிய உமக்கு ‘உயிர்க்கொலை பாவம்’ என்ற நிலைப்பாடு; எனக்கோ ‘மீன், கோழி மற்றும் ஆடுகள்வரை கொள்ளலாம். தவறொன்றுமில்லை’ எனும் நிலைப்பாடு.

     இதுமாதிரியான நுண் உணர்வுகளின் நிலைப்பாட்டு வேற்றுமைகள்தான் ஜெயன் சொல்லும் பிரிவினை(களு)க்குக் காரணமென்றும் எண்ணுகிறேன். இந்தமாட்டில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு படைப்பு, பல்வேறு நிலைப்பாட்டை இயம்பும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் பரிதாபம் என்னவெனில் இந்தப் பிரிவினைகளை எற்றுக்கொண்டவாறே ஒரு படைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டால் போதும். அதுவே இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; இதில் ஃபேக், ஒரிஜினல் என்ற பேச்சுக்கே இடமில்லை.  

‘அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.”

மேலும் எழுதுவோம்.

Sunday, June 30, 2013

மொட்டக்கடுதாசி



மோகி,
நாந்தேன்! 

நேத்துப் பாத்தேன், நம்ம ஊரு வாயக்காலிலே துணி தொவைக்கும்போது. ஒரு வாரமா மாமன் ஊருக்குப் போயிருந்தியா? கொஞ்சம் எளச்சு வந்திருக்க. ஏன் அங்க சோறுகீறு எதுவும் போடலியா? உன் அப்பத்தா நேத்து உன் மாமனார், அதேன் நம்ம வீட்டுக்கு வந்திருந்துச்சு. உங்க வீட்ல கோழிக் கறியாம். டீக்கடை ராமசாமி வூட்டு நாயி கடிச்சதுல இருந்து, கோழி திங்கிறது இல்லியாம். ஒண்ணா ஒக்காந்து கொழுக்கட்டை சாப்புட்டம்.

நாஞ்சொன்னேன் பாத்தியா? தங்கவேலு அவனோட வீட்ட நமக்கு விக்கமாட்டானாம். என்னமோ போ. இப்போ ஏதோ புதுசா கிரீமு வந்திருக்காம்; இனிமே பேரன் லவ்லி போடாத.ஆவணி மாசம் எல்லாருஞ்சேந்து மாகாளியம்மன் கோயிலு கும்பாவுஷேகம் வச்சிருக்காங்களாம். நேத்து மாரீப்பன் சொன்னான்.

ஊருல இருந்து ஏதாச்சும் வாங்கியாந்தியா? நீ சொன்னமாரியே பீடி குடிக்கறத உட்டுட்டேன். நம்ம செவலை மாட்டுக்கு பால் வத்திப்போயிருச்சு. இனிமே, மொண்டி அப்பிச்சி மாட்டுப்பால் தான் வாங்கோணும். தெண்டபாணி மாமன் சீட்டு ஆரம்பிச்சு இருக்காம். அம்மா சொல்லுச்சு. எங்கபோயி மாசம் ரெண்டாயிரம் குடுக்கறது?

செரி வுடு. எல்லாஞ்சரியாடும். 

உங்க அப்பங்கிட்ட எப்ப வந்து பொண்ணுக் கேக்கட்டும்? பல்லடத்துல இருந்து ஜாதகம் கேட்டு வந்தாங்களாம். மூணு ஏக்கரா காடு வச்சிருக்குற எனக்கு உங்க அப்பன் பொண்ணுக் குடுப்பானான்னு தெரியல. அதுனால, வெகுசீக்கிரமா சொல்லி அனுப்பு.

கலியாணச் செலவுக்கு காளைய விக்கோணும். அக்காளுக்கு சீலை துணிமணி எடுக்கோணும். ஒரு பவுனு இருவதாயிரம். ஆறு பவுனும் எடுக்கோணும். காட்டுப் பத்திரத்த வச்சனாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன்.

உனக்கு எத்தினி சீலை எடுக்குறது? நானு ஒரு சீலை எடுத்தேன். அம்மா அதப் பாத்திடுச்சு. “உனக்குத்தான்மா” ன்னு குடுத்துட்டேன். இதெல்லாம் பத்தாதுன்னு ராமண்ணங்கிட்ட சொல்லி ரெண்டு சீலை எடுத்திருச்சு. வாரம் எறநூறு ரூவா மூணு மாசம் கொடுக்கோணும்.

நாளைக்கு உன்னை மாரியாத்தா கோயில்ல பாக்குறேன்.

இதையப் படிச்சுட்டு, எப்பப் பொண்ணுப்பாக்க வரட்டும்னு பதில் கடுதாசி கொடுக்கவும். நாளைக்கு உங்க அப்பத்தா கூட வந்தாப் பேச முடியாது.

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.

-வெளங்காதவன்

Saturday, June 1, 2013

இலக்கிய மொண்ணைகள்-கடிதங்கள்



திரு. இலக்கியச்செம்மல் வெளங்காதவன் அவர்களுக்கு,



   இலக்கியச் சார்பும், மென்னியல் நுட்பமும், புனைவியல் திறனும் ஒருசேர்ந்த எழுத்தாளர்களுக்கு, (கவனிக்க) தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதை சமகால எழுத்தாளர்கள் குறையியைபுகின்றாரே? இது சமூக வக்கிரத்தின் வெளிப்பாடா? இன்னும் இது தொடருமா?



அன்புடன்,

கெண்டைக்கால் கெணேசன்,

கெணத்துக்கடவு.


அண்ணேன்,
உன்னோட கேள்வியப்பாத்து தெகச்சு நிக்கிறேண்ணேன். கெணத்துக்கடவுலிருந்து இம்மாம் பெரிய சமாச்சாரத்த, மூணே வரில கேட்டிருக்கியே!! இருண்ணேன் சொல்லுறேன்.

அதாகப்பட்டது, கெணேசன்ன்ற உன்னோட பேரைப் பாக்குறபோது, நீனு எவனுக்கும் மொய்கூட வச்சிருக்க மாட்டீனு தெரியுதுண்ணேன். அதேன் காரமடை சோசியறு கருணைன்றது.

ஆங், மேட்டருக்கு வாறேன்.
அதாவது, மொண்ணைங்கள பலவகையாப் பிரிக்கலாம், காற்றுப் பிரிவதுபோல். அதாவதுண்ணே, சத்தமா நாத்தமில்லாம, இல்ல சத்தமில்லாம நாறிப்போயி.
ஆனா, நாம பேசப்போற மொண்ணைங்க சத்தமாவும், நாத்தமாவும் காற்றைப்பிரிப்பவர்கள்.
இப்போ புரிஞ்சுதோ?
தெரியும்ண்ணேன், உனக்குப் புரியாம இருந்தாத்தேன் அதிசயம்.
சரி கண்ணத்தொடச்சிட்டு அடுத்த பாராவுக்குப் போ.
“எழுதறவன் எழுத்தாளன். அவனுக்குப் பணம் வருது. சிலே போறான், பொண்ணுங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்கறான், பிச்சை எடுக்கறான், டைரக்டர்ட்ட பல்ல இளிக்கறான், பெரியவர திட்டுறான் அப்புடி இப்புடின்னு திடும்னு கெளப்பிவுட்டாங்க; சொல்லப்போனா அவுனங்களே கெளப்பி வுட்டானுக.

எந்தக் கருமம் எப்புடிப் போனா, உனக்கென்ன? இல்ல எனக்கென்ன? இல்ல இந்த ஊருக்குத்தான் என்ன?”

ஆதலால், மூடிட்டுப் போயி வெவசாயம் பண்ணுற வழியப் பாக்கவும்.

வெ


டிஸ்கி:- இந்த மரணத்தைப் போல், வேறெந்த மரணமும் என்னைப் பாதித்ததில்லை. மிஸ் யூ சாரே!

டிஸ்கி1:- மேலே கண்ட டிஸ்கியைப் பற்றி விவாதிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, November 4, 2012

வருங்கால அமெரிக்க ஜனாதிபதிக்கு!



அம்மையீர்!

வணக்கம்.
தங்கள் நலம் உலகறிந்ததே. ஆனால், நானும் எம்மனோரும் சுகமாய் இல்லை.

காரணம் தாங்கள் அறிந்ததே.

பொய்த்துப் போன மழையாவது, மனசு வைத்து அப்பப்போ பெய்யுது. ஆனா, மறந்துப் போன உம்ம மனசு?

அமைச்சர்கள அடிமையாக்குறது, அதிகாரிகள தொரத்தி அடிப்பது, தி.மு.க.காரன ஜெயில்ல போடுறது, இணையத்துல எந்த அப்புராணி சப்புராணி உம்மப்பத்தி எழுதுனா, பொய் கேசு போடுறது; இதைப் பத்தியெல்லாம் சிந்திச்சிக்கிட்டு இருக்கீயன்னு நம்ம சின்ராசு சொன்னான்...

ஏதோ எப்புடியோ போயித் தொலையட்டும், நமக்கென்ன’ன்னு இருக்க முடியலை. வோட்டுப் போட்டுத் தொலஞ்சுட்டமேன்னு வவுரெல்லாம் எரியுது. ஆங், கேக்க மறந்துட்டேன். சசிகலாவின் நலத்தை விசாரித்ததாக சொல்லவும்.

அப்புறம், மேட்டருக்கு வாரேன்.

இந்தக் கரண்டு கரண்டுன்னு ஒண்ணு மேடம்ம்ம்ம்ம். என்னடா, அதைக் கண்டுபுடிச்சமேரி ரெண்டுவாட்டி சொல்றியேன்னு கேக்காதீக. ‘மைக்கேல் பாரடே’ன்னு ஒரு பன்னாட கண்டுபுடிச்சுட்டுப் போயிச்சேந்துட்டான். இப்போ அவன் போயிச் சேந்தது மேட்டர் இல்ல அம்மையீர். இப்போ இருக்குற கரண்டு கட்டு கண்டினியு ஆச்சு, அப்புறம் சோத்துக்கு ஊ ஊ ஊ ஊ ஊ.

எப்பிடியா? விவசாயம் பண்ண தண்ணி மட்டும் பத்தாது, அதை இறைக்க கரண்டும் வேணும்வோய். நம்பலைன்னா, நம்ம அண்ணாச்சி ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்கவும்.

இன்னொண்ணு இன்னான்னா, லங்கை லங்கைன்னு ஒரு நாடு இருக்குங்க(மேலதிக தகவலுக்கு எங்க ஊரு எம்.எல்.ஏ.வை அணுகவும்). கஞ்சி தண்ணிக்காக அவிங்க பாவம் மீன் புடிக்கப் போறாங்க. சில ராஸ்கோல்ஸ் அவிங்கள அடிச்சு அடிச்சு வெறட்டுராங்கலாம். இதெல்லாம் ஏன் என்னோட பார்வைக்குக் கொண்டுவரலைன்னு உங்க அடிமைகள ஒரு ரைட் விடுங்க மேடம்.

ஆனா, தில்லா ஒவ்வொரு படகுலையும் துப்பாக்கியோட ஒரு போலீச அனுப்பிப்பாருங்க. அப்பிடியில்லாம, “மீனவன் மீனைக் கொல்லுரான்”ற ரேஞ்சுல நம்ம பாடகிமேரி ஸ்டேட்மெண்டு வுட வேண்டாம். மேடம், அதுவும் உங்க கேசுல அடுத்து என்ன சொல்லி வாய்தா வாங்கலாம்னு யோசிச்சதுபோக நேரமிருந்தா இதைப் பற்றியும் ரோசிக்கவும்.

டெங்கு காய்ச்சல் இப்போ காட்டோ காட்டுன்னு, நம்ம டாக்குட்டார்மேரி காட்டுது. கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறேன், அதை சரி செய்ய எந்த நடவடிக்கை எடுக்காட்டியும் பரவாயில்ல, ஆனா, சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னாவது எங்களுக்குச் சொல்லவும்.

-வெட்கங்கெட்ட ஆட்சியர்கள் ஆளும் நாட்டில்,
மானங்கெட்ட குடிமகன்,
வெளங்காதவன்.

டிஸ்கி: யாராவதுக்கு மனம் புண்பட்டால், நல்ல டாக்டரிடம் காட்டவும். அப்பவும் ஆறவில்லையெனில் ஆசிட் வாங்கி ஊத்தவும். நன்னி.