இணைப்பில்

Wednesday, October 2, 2013

கொலை


இறக்கை இதழில் வந்த கதை.


சாயமேறிய அந்த நரையெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லைதான். ஆனாலும், நான் அவனைக் கொன்று கொண்டிருந்தது பிரச்சனையாக இருந்திருக்காது. பிரச்சனைகள் தீர்க்க இயலாமல்தான் என்னை நம்பி, கைக்கொண்டான். 
நான் அவனை தேர்ந்த கலைஞனைப்போல் கொன்று கொண்டிருந்தேன். அவன் தொண்டைதான் முதற்குறி. தொண்டை கமறக் கமறக் கொல்வது தனிச்சுகம். தொண்டை தாக்கிக் கொல்லவியலாமல் கொஞ்சம் நுரையீரல், கொஞ்சம் குடலெனப் பிரித்துக் கொண்டு கொல்லத் துவங்கினேன்.
இதோ, குடலிலிருந்த அமிலமெல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அமிலங்களின் வெம்மையால் அவன் வெகுநாட்களாக உண்டிருக்கமாட்டான் என உணரும்போதே, குடல் அமிலங்கள் மிக அடர்த்தியாக என்னைச் சூழ்ந்துகொண்டது.
அன்றொரு நாள் நான் கொன்றவன் பிரியாணி உண்டிருந்தது தூர மேகத்தின் நிழலாய் வந்துபோனது.
ஆம்...
நான் கொலைகாரன்தான். ஊரிலுள்ள எவரையும் கேளுங்கள். என்னைக் கொலைகாரனென்றே சொல்வார்கள். என்னைப் பிடித்து சிறையில் தள்ள எவனுக்கும் தைரியமில்லை. கொலைகளை ரசித்துச் செய்பவன். அந்தக் கொலைகளில்தான் என் ஆனந்தமிருக்கிறது. 
மீந்த நேரங்களில், அமைதியான நீரைப்போல் ஒரேயிடத்தில் அடைந்து கொண்டு. ஆனாலும், கொலை செய்வதென்றால் எட்டடிப்பாய்ச்சல்.
நான் கொல்ல முயற்சி செய்து, பிழைத்தவர்களில் இவனொருவனல்ல. 

ஆம், என் பணியை நான் மிகச் சிரத்தையாக, சிரமின்றியே நிறைவேற்றிவிடுவேன்.
ஒருவழியாய் என்னைக் கண்டு ஒழிந்துகொண்ட இவன் உயிரையும் குடித்துவிட்டேன். 
இதோ, நானும் மரிக்கப் போகிறேன். 
ஆம். என்னால் இறந்தவனின் இறுதிநாளே, எனது இறுதி நாளுமாம்.
கொன்றவனின் கை, கால், இதயமெங்கும் தாக்கி சக்கரவியூகத்தை உடைக்கத்தெரியாத அபிமன்யுவைப் போல, இந்த உடலிலேயே இறந்துவிடப்போகிறேன், விஷமாகிய நான்!

-வெளங்காதவன்

Thursday, August 29, 2013

போங்கடா போக்கத்த பயலுகளா! - மீள்பதிவு

மானங்கெட்ட ஊருய்யா......
இங்க இருந்து உசிரு வாழுறதுக்கு, எங்கியாவது\ போயி பிச்சை எடுக்கலாம்.....
திருட்டுக் கிழங்களும், கூட்டுக் களவாணிகளும், உயர்மட்ட அம்மைகளும் சேந்து அரசியல் நாடகங்கள ஆரம்பிச்சுட்டாங்க!
ஏலே, சின்ராசு!
எல்லாம் இனாமாமே?
ங்#$%தா, சரக்கும் சைட் டிஷும் தவிர மத்ததெல்லாம் இனாம்.....
ஆனா ஒண்ணுலே, நம்பட்ட ஆட்டையப் போட்டத, கொஞ்சம்னாலும் திருப்பிக் கொடுப்பானுங்கனு ஒரு நம்பிக்கை இருக்குலே.......
ஆமா, கேக்க மறந்துட்டேன்ல,
வெங்காயம் கிலோ என்ன வெலை?
ராசா, ராசா னு ஒருத்த(ன்)ர் இருந்தாரே, ஞாபகம் இருக்கா?
2 ஜி அலைக்கற்றைனா தெரியுமா?
ராமதாசு னு ஒரு மானஸ்தன், அந்தக் கட்சியோட கொள்கைகள் தெரியுமா?
ஊற்றிக் கொடுத்தவர்களுக்கும், குடித்தவர்களுக்கும் உறவு நிலை என்ன இப்போ?
ஏலே, சின்ராசு....
எங்கலே ஓடுத? பதில் சொல்லுலே.....
யோவ்.... சின்ராசு......
ஓடியே போயிட்டான் பயபுள்ள...



சரி சரி....
உங்களுக்கெல்லாம் சொல்லுறதுக்கு ஒரு மயிரும் மேட்டரும் இல்ல....
போய், ஓசில கெடைக்கிறத வாங்கிட்டு எவனுக்கோ ஓட்டுப் போட்டுட்டு, முடிஞ்சா அவங்களோட அடிய வருடி........................
போறதுக்கு முன்னாடி இன்னும் ஒண்ணு.....
கொஞ்சம் சோத்துல உப்பு சேர்த்துக்குங்க அப்பு!

-வெளங்காதவன்

Thursday, July 4, 2013

முத்தாய்ப்பு



இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

கட்.

இடம்- நெகமம்.
நாள்- மிகச்சரியாக இருபத்தைந்து வருடத்துக்கு முன்பு.

“பாருடி. நம்ம பையன் மொதோ ரேங்கு வாங்கியிருக்கான்”, சரசுவிடம் காட்டிக் கொண்டிருந்தான் கருப்புசாமி.
“ஆமா, இங்க பாத்திரங்கழுவ நேரமில்ல. படிக்கிறதப் பாக்க நான் வாரேன்”, இருந்த வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தாள் சகதர்மினி.
“எங்கப்பந்தான் என்னிய படிக்க வக்கில.இவனாவது படிக்கவச்சு பெரிய ஆளா வரட்டுமே” தாயின் பேச்சைக் கேட்டு தளர்வாயிருந்த மகனை அரவணைக்கும்படி பேசினான் கருப்பு.
அந்தக் குடிசைக்குக் கதவெல்லாம் இல்லை. அடுப்புப் புகை கண்ணை கசக்க வைக்கும். ஆனாலும், கணேசன் பளீரெனச் சிரித்தபடி விளையாடப்போனான்.
“எங்க அப்பனை என்னால வச்சுக் காப்பாத்த முடியலை. இவன் படிச்சாவது நம்மைக் காப்பாத்தட்டுமே” மனைவியின் பதிலை எதிர்பாராமல் கருப்பு பேசியது முனகலாக கணேசன் காதுக்கு எட்டியது.

கட்.

இடம்- கோவை.
நாள்- இரண்டாயிருத்துப் பத்தின் ஆறாவது மாதத்தின் ஒரு வாரநாள்.

“யூ ஆர் செலக்ட்டேட்; கங்க்ராஜுலேசன்” நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தான் கணேசன்.

“தேன்க்யூ வெரிமச் சார், தேன்க் எ லாட்” வார்த்தை வராமல் நீர் மல்கப்பேசினான். கையை நீட்டியவர் அவன் கட்டுப்பாட்டிலிருந்து தன் கையைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்

இடம்- செஞ்சேரிமலை
நாள்- இரண்டாயிரத்துப் பன்னிரண்டு, கூதிர்கால மாதக் கடைசி.

“பெரியவா யாராவது வந்திருந்தா கூப்பிடுங்கோ. தாலி எடுத்துக்கொடுக்கணும்” ஐயர் அடிநாதமாக முழங்கினார்.
“வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்றோம் சாமி; நீங்களே தாலி எடுத்துக் கொடுங்கோ”வென வேண்டினான் கணேசன்.
அனைத்தும் முடிந்து, அவன் இல்லை இல்லை, அவர்கள் படியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

கட்

இடம்-பழனி.
நாள்-இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தின் ஏதோவொரு நாள்.

நைந்துபோன பையுடன் இருந்த அந்த வயதான பிச்சைக்காரர், அமர இடமின்றி ஒவ்வொரு படிகளாய் ஏறிக்கொண்டிருந்தார்.

-வெளங்காதவன்

Sunday, June 30, 2013

மொட்டக்கடுதாசி



மோகி,
நாந்தேன்! 

நேத்துப் பாத்தேன், நம்ம ஊரு வாயக்காலிலே துணி தொவைக்கும்போது. ஒரு வாரமா மாமன் ஊருக்குப் போயிருந்தியா? கொஞ்சம் எளச்சு வந்திருக்க. ஏன் அங்க சோறுகீறு எதுவும் போடலியா? உன் அப்பத்தா நேத்து உன் மாமனார், அதேன் நம்ம வீட்டுக்கு வந்திருந்துச்சு. உங்க வீட்ல கோழிக் கறியாம். டீக்கடை ராமசாமி வூட்டு நாயி கடிச்சதுல இருந்து, கோழி திங்கிறது இல்லியாம். ஒண்ணா ஒக்காந்து கொழுக்கட்டை சாப்புட்டம்.

நாஞ்சொன்னேன் பாத்தியா? தங்கவேலு அவனோட வீட்ட நமக்கு விக்கமாட்டானாம். என்னமோ போ. இப்போ ஏதோ புதுசா கிரீமு வந்திருக்காம்; இனிமே பேரன் லவ்லி போடாத.ஆவணி மாசம் எல்லாருஞ்சேந்து மாகாளியம்மன் கோயிலு கும்பாவுஷேகம் வச்சிருக்காங்களாம். நேத்து மாரீப்பன் சொன்னான்.

ஊருல இருந்து ஏதாச்சும் வாங்கியாந்தியா? நீ சொன்னமாரியே பீடி குடிக்கறத உட்டுட்டேன். நம்ம செவலை மாட்டுக்கு பால் வத்திப்போயிருச்சு. இனிமே, மொண்டி அப்பிச்சி மாட்டுப்பால் தான் வாங்கோணும். தெண்டபாணி மாமன் சீட்டு ஆரம்பிச்சு இருக்காம். அம்மா சொல்லுச்சு. எங்கபோயி மாசம் ரெண்டாயிரம் குடுக்கறது?

செரி வுடு. எல்லாஞ்சரியாடும். 

உங்க அப்பங்கிட்ட எப்ப வந்து பொண்ணுக் கேக்கட்டும்? பல்லடத்துல இருந்து ஜாதகம் கேட்டு வந்தாங்களாம். மூணு ஏக்கரா காடு வச்சிருக்குற எனக்கு உங்க அப்பன் பொண்ணுக் குடுப்பானான்னு தெரியல. அதுனால, வெகுசீக்கிரமா சொல்லி அனுப்பு.

கலியாணச் செலவுக்கு காளைய விக்கோணும். அக்காளுக்கு சீலை துணிமணி எடுக்கோணும். ஒரு பவுனு இருவதாயிரம். ஆறு பவுனும் எடுக்கோணும். காட்டுப் பத்திரத்த வச்சனாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன்.

உனக்கு எத்தினி சீலை எடுக்குறது? நானு ஒரு சீலை எடுத்தேன். அம்மா அதப் பாத்திடுச்சு. “உனக்குத்தான்மா” ன்னு குடுத்துட்டேன். இதெல்லாம் பத்தாதுன்னு ராமண்ணங்கிட்ட சொல்லி ரெண்டு சீலை எடுத்திருச்சு. வாரம் எறநூறு ரூவா மூணு மாசம் கொடுக்கோணும்.

நாளைக்கு உன்னை மாரியாத்தா கோயில்ல பாக்குறேன்.

இதையப் படிச்சுட்டு, எப்பப் பொண்ணுப்பாக்க வரட்டும்னு பதில் கடுதாசி கொடுக்கவும். நாளைக்கு உங்க அப்பத்தா கூட வந்தாப் பேச முடியாது.

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.

-வெளங்காதவன்

Saturday, June 1, 2013

இலக்கிய மொண்ணைகள்-கடிதங்கள்



திரு. இலக்கியச்செம்மல் வெளங்காதவன் அவர்களுக்கு,



   இலக்கியச் சார்பும், மென்னியல் நுட்பமும், புனைவியல் திறனும் ஒருசேர்ந்த எழுத்தாளர்களுக்கு, (கவனிக்க) தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதை சமகால எழுத்தாளர்கள் குறையியைபுகின்றாரே? இது சமூக வக்கிரத்தின் வெளிப்பாடா? இன்னும் இது தொடருமா?



அன்புடன்,

கெண்டைக்கால் கெணேசன்,

கெணத்துக்கடவு.


அண்ணேன்,
உன்னோட கேள்வியப்பாத்து தெகச்சு நிக்கிறேண்ணேன். கெணத்துக்கடவுலிருந்து இம்மாம் பெரிய சமாச்சாரத்த, மூணே வரில கேட்டிருக்கியே!! இருண்ணேன் சொல்லுறேன்.

அதாகப்பட்டது, கெணேசன்ன்ற உன்னோட பேரைப் பாக்குறபோது, நீனு எவனுக்கும் மொய்கூட வச்சிருக்க மாட்டீனு தெரியுதுண்ணேன். அதேன் காரமடை சோசியறு கருணைன்றது.

ஆங், மேட்டருக்கு வாறேன்.
அதாவது, மொண்ணைங்கள பலவகையாப் பிரிக்கலாம், காற்றுப் பிரிவதுபோல். அதாவதுண்ணே, சத்தமா நாத்தமில்லாம, இல்ல சத்தமில்லாம நாறிப்போயி.
ஆனா, நாம பேசப்போற மொண்ணைங்க சத்தமாவும், நாத்தமாவும் காற்றைப்பிரிப்பவர்கள்.
இப்போ புரிஞ்சுதோ?
தெரியும்ண்ணேன், உனக்குப் புரியாம இருந்தாத்தேன் அதிசயம்.
சரி கண்ணத்தொடச்சிட்டு அடுத்த பாராவுக்குப் போ.
“எழுதறவன் எழுத்தாளன். அவனுக்குப் பணம் வருது. சிலே போறான், பொண்ணுங்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுக்கறான், பிச்சை எடுக்கறான், டைரக்டர்ட்ட பல்ல இளிக்கறான், பெரியவர திட்டுறான் அப்புடி இப்புடின்னு திடும்னு கெளப்பிவுட்டாங்க; சொல்லப்போனா அவுனங்களே கெளப்பி வுட்டானுக.

எந்தக் கருமம் எப்புடிப் போனா, உனக்கென்ன? இல்ல எனக்கென்ன? இல்ல இந்த ஊருக்குத்தான் என்ன?”

ஆதலால், மூடிட்டுப் போயி வெவசாயம் பண்ணுற வழியப் பாக்கவும்.

வெ


டிஸ்கி:- இந்த மரணத்தைப் போல், வேறெந்த மரணமும் என்னைப் பாதித்ததில்லை. மிஸ் யூ சாரே!

டிஸ்கி1:- மேலே கண்ட டிஸ்கியைப் பற்றி விவாதிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.